Friday, February 10, 2017

சி3 (சிங்கம்3) விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி
O Sone O Sone


ஒளிப்பதிவு: ப்ரியன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: ஹரி



இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார்.

விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.


இந்தக் கொலையில், வெளிநாட்டிலிருந்து விஷக் கழிவுகளைக் கொண்டுவந்து இந்தியாவில் எரிக்கும், காலாவதியான மருந்துகளை இந்தியாவில் விற்று காசு பார்க்கும் கொடிய கும்பல், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகள் பின்னணி இருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார்.


இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சூர்யா எப்படித் தண்டிக்கிறார் என்ற டெம்ப்ளேட் கதைதான் சி3.

ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் செம விறுவிறு...

ஒரு ஆக்ஷன் கதையில் எத்தனை ஓட்டைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... கதை அரைத்த மாவாகவே கூட இருக்கட்டும். ஆனால் காட்சிகளை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடத்தும் வித்தை கை வந்தால் ஒவ்வொருவரும் ஹரிதான்!


சி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம். எல்லோரும் ஹை டெசிபலில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். முதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.

பார்க்கிறவர்களின் ரத்தத்தைச் சூடாக்கும் பரபர நடிப்பு. வசன உச்சரிப்பில் அனல் கக்குகிறார். ஆனா இவ்ளோ கத்தாதீங்க சூர்யா... தொண்டைக்கும் இதயத்துக்கும் நல்லதல்ல, உங்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்.. அப்புறம் காதல் காட்சிகளில் எதற்கு இத்தனை விறைப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸா லவ் பண்ணுங்க பாஸ்! சூர்யாவுக்கு இளம் ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் அனுஷ்கா. இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அவரது அழகு. நல்ல வேளை இந்தப் படத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

துப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. ரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். அனுபவித்து சிரிக்க கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம் இயக்குநர்! படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். வில்லனைத் தவிர, மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள். பாடகர் க்ரீஷுக்கும் ஒரு வேடம் தந்திருக்கிறார்.
ஹரிக்கு ஏற்ற கேமிராமேன் ப்ரியன். ஹாரிஸ் ஜெயராஜினி இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மண்டைக்குள் செம குடைச்சல்! எடிட்டிங்கில் இன்னும்கூட கவனம் செலுத்தியிருக்கலாம் விடி விஜயன். அவரும்தான் என்ன செய்வார், 18 லட்சம் அடி எடுத்து, அதை 14 ஆயிரம் அடியாக்குவது சாமான்ய விஷயமா என்ன!

  ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம் இந்த சி3!


No comments:

Post a Comment